கரீபியன் தீவான PUERTO RICO – வில், 20 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடற்படை தளத்தை மீண்டும் திறந்து அமெரிக்கா போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெனிசுலா மீது வெளிப்படையாக போர் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….
தென்அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலா, ஒரு காலத்தில் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2000ம் ஆண்டில் இருநாடுகள் இடையே போதைப்பொருள் கடத்தல் காரணமாக பிரச்னை ஏற்பட்டது.
வெனிசுலாவின் அதிபராக இருந்த ஹூகோ சாவேஷ் மற்றும் நிகோலஸ் மதுரோ ஆகியோரின் செயல்பாடு அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
வெனிசுலாவும், அமெரிக்காவும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் இருநாடுகள் இடையே கரிபீயன் கடல் அமைந்துள்ளதால், அதன் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டையே தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் முன்வைக்கிறார்.
இதனால் இருநாடுகள் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நிகோலஸ் மதுரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரை கைது செய்யவும் உதவினால் 438 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்ததன் மூலம், எத்தகைய மோதல் போக்கு நிலவுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அண்மைகாலமாக, கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தும் கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. OPERATION SOUTHERN SPEAR என்ற பெயரில் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கை வெனிசுலாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு மேலும் வலுத்துள்ளது. வெனிசுலாவில் ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு, எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என ட்ரம்ப் தெரிவித்ததும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளது.
இந்நிலையில், கரீபியன் தீவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள PUERTO RICO – வில், இருபது ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடற்படை தளத்தை அமெரிக்கா மீண்டும் திறந்திருப்பது, போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. PUERTO RICO – வில் அமெரிக்காவுக்கு சொந்தமாக 5 கடற்படை தளங்கள் உள்ளன.
இதில் ROOSEVELT ROADS கடற்படை தளம் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 2004-ம் ஆண்டில் மூடப்பட்டது. இந்நிலையில், கடற்படை தளத்தை மீண்டும் அமெரிக்கா தூசி தட்டியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், வடக்கு வெனிசுலாவுக்கும், ROOSEVELT ROADS கடற்படை தளத்திற்கும் இடையேயான தூரம் 500 மைல் மட்டுமே.
PUERTO RICO – வில் உள்ள கடற்படை தளங்களில் F-35 போர் விமானங்கள், B-52 BOMBER ரக விமானங்கள், MQ-9 Reaper ட்ரோன்கள் ஆகியவற்றை அமெரிக்கா நிலைநிறுத்தியிருக்கும் நிலையில், வெனிசுலாவும் தன் பங்கிற்கு தளவாடங்களை குவித்து வருகிறது.
ஈரான் வழங்கிய Kamikaze ட்ரோன்களை, வடக்கு பகுதியில் உள்ள கடற்படை தளங்களில் குவித்திருக்கும் நிகோலஸ் மதுரோ அரசு, சீனா மற்றும் ரஷ்யாவின் உதவியையும் நாடியிருக்கிறது. ரஷ்யாவின் உளவு கப்பலும், சீனாவின் மருத்துவ உதவி கப்பலும், PUERTO RICO ஒட்டிய OAHU பகுதியில் நங்கூரமிட்டுள்ளதால், மீண்டும் உலக போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
















