வரும் 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்றும், 2035 ஆண்டிற்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை திறனில் விரைவான கட்டத்துக்கு இஸ்ரோ தயாராகி வருவதாகவும், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வணிக தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் பல பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி பயணங்கள் உள்பட 7 ஏவுதல்களை இலக்காக இஸ்ரோ கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்திரயான்-4, வரும் 2028-ம் ஆண்டில் ஏவப்படும் என்றும், இது சந்திரனுக்கு சென்று திரும்பும் போது மண், பாறை மாதிரி எடுத்து வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
















