கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை மாதம் ஐயப்பன் சுவாமிக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், மாத தொடக்கத்தில் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்வது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், புலியின் உருவம் பொறித்த கொடி ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரத்தை தொடங்கினர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பால விநாயகர் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை மாத பிறப்பையொட்டி பால விநாயகர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து சபரிமலை மண்டல பூஜைக்காக மாலை அணிந்தனர். புதிதாக மாலை அணியும் பக்தர்கள் சந்தன மாலை மற்றும் துளசி மாலைகளையும், 18 ஆண்டுகளாக தொடர்ந்து மாலை அணிந்து செல்லும் பக்தர்களான குருசாமிகள் ருத்ராட்ச மாலைகளையும் அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.
பால விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் மண்டல பூஜைகள் விமரிசையாக தொடங்கின. சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் காலை கணபதி ஹோமமும், ஐயப்பன் சுவாமிக்கு நெய்யாபிஷேகமும் செய்யப்பட்டது. இ
தனை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















