சென்னையில் அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள், ஓட்டுநர் மற்றும் செய்தியாளரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, தாம்பரத்திலிருந்து மேடவாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, காமராஜபுரத்தில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது.
பச்சை சிக்னல் கிடைத்தவுடன் பேருந்து புறப்பட்டபோது, பின்பக்கமாக வந்த கார் ஒன்று பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில், காரின் கண்ணாடி உடைந்தது. இதனால் காரில் வந்த பெண்கள் ஆத்திரமடைந்து, பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தச் சம்பவத்தைச் செய்தியாக்கச் சென்ற செய்தியாளரை ஒருமையில் பேசி அநாகரிகமாக நடந்துகொண்டனர்.
இந்தச் சண்டையால் மேடவாக்கம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
















