டெல்லி கார்வெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாகத் தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சக்திவாய்ந்த வேறொரு வெடிபொருளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது என்ன வெடிபொருள்?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
2015ம் ஆண்டு ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. அதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதே போல் 2016ம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 32 பேர் பலியாகினர். 2017ம் ஆண்டு பார்சிலோனாவிலும், மான்செஸ்டரிலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 35 பேர் உயிரிழந்தனர்.
உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த அனைத்து தாக்குதல்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. TATP எனப்படும் ட்ரை-அசிட்டோன் ட்ரை-பெராக்சைடு (Triacetone triperoxide) வெடிப்பொருளை பயன்படுத்திதான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த TATP பலத்த சேதத்தை விளைவிப்பதால், “சாத்தானின் தாய்” என்ற அடைமொழியில் இது அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், டெல்லி தாக்குதலிலும் TATP-ன் பங்கு உள்ளதா என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. டெல்லி தாக்குதல் குறித்த ஆரம்பக்கட்ட விசாரணையின்போது அம்மோனியம் நைட்ரேட்டை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.
டெல்லி சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஃபரிதாபாத்தில் கிலோ கணக்கில் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது இந்தச் சந்தேகத்திற்கு காரணமாக அமைந்தது. ஆனால், அடுத்தடுத்த கட்ட விசாரணைகளின் முடிவில் போலீசாரின் பார்வை TATPன் பக்கம் நகர்ந்துள்ளது. பொதுவாக வெடிப்பொருட்களை வெடிக்க செய்ய டெட்டனேட்டர்கள் தேவைப்படும். அந்த டெட்டனேட்டர்களை வாங்குவது என்பது சாதாரண காரியமல்ல.
அவற்றின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, பயன்பாடு என அனைத்திற்கும் மிக கறாரான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், TATP வெடிமருந்தை வெடிக்க வைக்க டெட்டனேட்டர்களின் உதவியே தேவையில்லை. அசிட்டோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற பொதுவான ரசாயனங்களில் இருந்தே இது தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள பெராக்சைடு மிகவும் பலவீனமான மூலக்கூறுகளை கொண்டுள்ளதால், சிறிய அளவிலாள வெளித்தூண்டுதலே போதும். இது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி கற்பனை செய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்திவிடும்.
சாதாரண அதிர்ச்சி, உராய்வு, அழுத்தம், குறைந்த அளவிலான வெப்பநிலை உள்ளிட்டவை கூட Triacetone triperoxide வெடிக்க காரணமாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகத்தான், உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்களுக்கு, பயங்கரவாதிகளின் முதன்மை தேர்வாக TATP இருந்து வருகிறது.
டெல்லி தாக்குதலுக்கு TATP பயன்படுத்தபட்டதா என்பது குறித்து ஆய்வக பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதற்காக, விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன
. TATP-தான் பயன்படுத்தபட்டது என்றால், அந்த வெடிப்பொருளை உமர் நபி எவ்வாறு பெற்றார், யார் யார் அவருக்கு உதவினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
















