வங்கதேச போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் கடந்தாண்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பிரதமர் அலுவலகம் மற்றும் பொது சொத்துகள் சூறையாடப்பட்டன. போராட்டத்தின்போது ஏற்பட்ட பயங்கர வன்முறையில் சுமார் ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து வங்கதேச அரசு கவிழ்ந்த நிலையில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டுத் தப்பியோடினார். தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதனிடையே அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களைச் சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் ஐ.ஜி ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாக வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்த தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தீர்ப்பாயத்தை சுற்றி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















