பெங்களூரைச் சேர்ந்த பெண் மென்பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் என்ற போர்வையில் ஏமாற்றிய மோசடி கும்பல், அவரிடம் இருந்து 32 கோடி ரூபாய் பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை 6 மாத காலம்வரை டிஜிட்டல் அரஸ்ட் செய்து வைத்திருந்த மோசடி கும்பல், அவரை ஸ்கைப் வீடியோ கால்மூலம் தொடர் கண்காணிப்பில் வைத்து மிரட்டி வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி இவரை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு மும்பையில் இருந்து அழைப்பதாகக் கூறியுள்ளார். மேலும், உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் 3 கிரெடிட் கார்டுகள், 4 கடவுச்சீட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட MDMA போதைப்பொருள் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் உங்கள் பெயரை பயன்படுத்தி பெரிய அளவில் சைபர் குற்றம் நடந்துள்ளதாகக் கூறிய அவர், அனைத்து சாட்சியங்களும் உங்களுக்கு எதிராக இருப்பதால் உங்களை “டிஜிட்டல் அரஸ்ட்” செய்துள்ளதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார். பின்னர், குற்றவாளிகள் உங்கள் வீட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறிய அந்த நபர், அவர்களை சிபிஐ கண்காணித்து வருவதால் போலீசாருக்கு தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
தங்கள் உத்தரவை மீறிப் போலீசாருக்கு தகவல் கூறினால் உங்கள் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அந்த நபர் பெண்ணை எச்சரித்துள்ளார். மகனின் திருமண தேதி நெருங்கிக் கொண்டிருந்த சூழலில், அவரின் பேச்சு அந்தப் பெண்ணை அதிர்ச்சி மற்றும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. அதன் காரணமாக அவர் அந்த நபரின் கூற்றுப்படி நடக்க தொடங்கியுள்ளார். தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் இரு ஸ்கைப் ஐடி-க்களை தொடங்க அந்த நபர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
அதன்படி அவர் ஸ்கைப் ஐடி-க்களை தொடங்கியதும், அவரை டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் வீடியோ காலில் அணுகியுள்ளனர். அவர்கள் அந்த பெண்ணை தொடர்ந்து வீடியோ கால் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
முதல் வாரத்தில் மோகித் ஹண்டா என்பவரும், அடுத்தடுத்த வாரங்களில் ராகுல் யாதவ் மற்றும் பிரதீப் சிங் என்பவர்களும் மூத்த சிபிஐ அதிகாரிகள் எனக்கூறி, பெண்ணிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 22-ம் தேதி வரை தொடர்ந்த விசாரணையில், பெண்ணின் வங்கி கணக்குகள், நிலையான வைப்பு நிதி, சேமிப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்த நபர்கள் கேட்டறிந்துள்ளனர்.
பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்ய வைத்துள்ளனர். குறிப்பாக அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை, “ஜாமின் தொகை” என்ற பெயரில் பல்வேறு பணப்பரிவர்த்தனைகள் வாயிலாகச் சுமார் 2 கோடி ரூபாய் வரை அந்த நபர்கள் அனுப்ப செய்துள்ளனர். அதன் பிறகு “வரித் தொகை” என்ற பெயரிலும் சில கோடிகளை வங்கி பணப்பரிவர்த்தனைகள் மூலம் அனுப்ப செய்துள்ளனர்.
இதற்கிடையே பெண்ணுக்குச் சந்தேகம் வராமல் இருக்க அந்த நபர்கள், இந்திய ரிசர்வ் வங்கி நிதி உளவுத்துறை என்ற போலியான தலைப்புகளில் பல்வேறு கடிதங்கள் மற்றும் ஆவணங்களை காட்டியுள்ளனர். அனைத்தும் சட்டப்படி நடப்பதாக கூறிய அவர்கள், வழக்கில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்ட பின் பெறப்பட்ட பணம் அனைத்தும் திருப்பி அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மகனின் திருமண நிச்சயதார்த்த தேதியான டிசம்பர் 6-ம் தேதிக்கு முன், சிபிஐ மூலம் CLEARANCE LETTER வழங்கப்படும் என்றும் கூறி போலியான சான்றிதழையும் அவர்கள் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து 6 மாத காலம்வரை அந்தப் பெண் எங்கே செல்கிறார், என்ன செய்கிறார் உள்ளிட்ட அனைத்தையும், அந்த நபர்கள் ஸ்கைப் வீடியோ காலில் கண்காணித்து வந்துள்ளனர். இதனால், ஒருமுறை அவர் கடும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த 6 மாத காலத்தில் மட்டும் சுமார் 187 வங்கி பணப்பரிவர்த்தனைகள் மூலம், சேமிப்புகள், நிலையான வைப்பு நிதிகள் உள்ளிட்டவையிலிருந்து சுமார் 32 கோடி ரூபாயை அந்த நபர்கள் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதிக்குள் அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்து பணம் திருப்பி வழங்கப்படும் என அவர்கள் கூறியிருந்த நிலையில், மார்ச் மாதத்தைக் கடந்தும் பணத்தை திருப்பித் தராமல் அந்தப் பெண்ணை அவர்கள் ஏமாற்றி வந்துள்ளனர்.
மார்ச் 26-ம் தேதிக்கு பின் அவர்கள் தொடர்புகொள்வதை நிறுத்திய நிலையில், தான் மோசடி நபர்களின் வலையில் சிக்கி ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் மகனின் திருமணம் நல்லபடியாக முடிந்த நிலையில், நடந்த மோசடிகுறித்து அந்தப் பெண் குடும்பத்தாரிடம் பகிர்ந்துள்ளார். அதனடிப்படையில் நடந்த மோசடி சம்பவம் தொடர்பாகச் சைபர் கிரைம் போலீசாரிடம் முறையாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த மாபெரும் மோசடி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மோசடி குறித்து முழுமையாக விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனப் புகாரில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், “டிஜிட்டல் அரஸ்ட்” என்ற பெயரில் நடக்கும் பண மோசடிகள்குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
















