சென்னை சைதாப்பேட்டையில் சக ஊழியரிடம் நகையைத் திருடிய அரசு செவிலியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கம்மாள் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி நிஷாவும் எழும்பூர் அரசுக் குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 15ம் தேதி பணியில் இருந்த தங்கம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆட்டோவில் வீட்டிற்கு செல்லப் புறப்பட்டார். அப்போது அவருக்கு உதவியாக ஜான்சிநிஷாவும் அதே ஆட்டோவில் சென்றுள்ளார்.
இருவரும் வீட்டிற்கு சென்றபின் தங்கம்மாளின் 5 சவரன் தங்க நகை மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் நகையை எடுக்கவில்லை என்பதை உறுதி செய்த போலீசார் ஜான்சி நிஷாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆட்டோவில் பயணிக்கும்போது தங்கம்மாள் தூங்கியதும் அவரிடமிருந்த நகையை ஜான்சி நிஷா திருடியது தெரியவந்தது.
இதே போல மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியர்களின் நகையையும் ஜான்சி நிஷா திருடியது அம்பலமானது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
















