மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே வரிகள் பகிா்ந்தளிக்கும் கொள்கையை உருவாக்கும் பொறுப்பை உடைய 16-ஆவது நிதிக் குழுவின் அறிக்கை, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
16-ஆவது நிதிக் குழு, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற அதிகாரியான ஆனி ஜாா்ஜ் மேத்யூ, பொருளாதார நிபுணா் மனோஜ் பாண்டா ஆகியோா் முழு நேர உறுப்பினா்களாகவும், எஸ்பிஐ குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் சௌம்யகாந்தி கோஷ், ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் ரபி சங்கா் ஆகியோா் பகுதி நேர உறுப்பினா்களாகவும் உள்ளனா்.
மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு விகிதத்தைத் தீா்மானிப்பதற்கு முன், இந்தக் குழு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று அவற்றின் நிதி நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்தது.
அதைத் தொடர்ந்து, 16-ஆவது நிதிக் குழுவின் தலைவா் அரவிந்த் பனகாரியா மற்றும் பிற உறுப்பினா்கள், குடியரசுத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து அறிக்கையைச் சமா்ப்பித்தனா்.
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி மற்றும் மானியங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்கான புதிய அளவுகோல்களை இந்த அறிக்கை வரையறுக்கும். 2026-27ஆம் ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த அறிக்கை அமலுக்கு வரவுள்ளது.
















