பெங்களூரு விமான நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை CISF வீரர்கள் சுற்றிவளைத்த சிசிடிவி காட்சி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு நள்ளிரவில் வலம் வந்துள்ளார்.
பின்னர் அங்குள்ள டாக்ஸி ஓட்டுநர்களை நோக்கி ஆவேசமாகச் சென்ற அவர், அவர்களை கத்தியை கொண்டு தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அப்போது விமான நிலைய பாதுகாப்பில் இருந்த CISF குழுவின் அதிகாரி சுனில் குமார் தலைமையிலான குழுவினர், சற்றும் தாமதிக்காமல் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பிறகு அவரை கைது செய்த அதிகாரிகள், அவர் தனது கைகளில் வைத்திருந்த கத்தியைப் பறிமுதல் செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்தத் தாக்குதல் முன்னர் ஏற்பட்ட ஒரு தகராறுக்கு பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டாக்ஸி ஓட்டுநரை அந்த நபர் துரத்திச் செல்வதும், CISF குழுவினர் விரைந்து அவரை காப்பாற்றும் காட்சியும் சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள், CISF வீரர்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
















