மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்பது தொடர்பான வழக்கில், கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில் சொத்துக்களை மீட்டு பாதுகாக்கக் கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை தரப்பில் மீனாட்சி அம்மன் கோயிலின் உப சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இணை ஆணையர், வருவாய் துறை அலுவலர் இணைந்து கோயில் சொத்துக்களை ஆவணங்களின் அடிப்படையில் பொருத்தி, உறுதி செய்ய வேண்டும் எனவும், வரும் 22ஆம் தேதி அது தொடர்பான கூட்டத்தை நடத்தி எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் கிரானைட் கற்கள் புதிதாகப் பதிக்கப்படுவதாகவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக யானை மண்டபம் பகுதியில் உணவு சமைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு, கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















