பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ ஊழியர்கள் மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 36 துறை சார்ந்த அலுவலர்கள் இன்று பணிக்கு வராததால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல் சேலத்திலும் ஜாக்டோ -ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்தனர்.
















