இந்தியாவில் தேடப்படும் மாவோயிஸ்ட் தளபதிகளில் ஒருவரான மாத்வி ஹிட்மா பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த ஹிட்மா, மாவோயிஸ்ட் அமைப்பில் மிக இளம் வயதிலேயே சேர்ந்து படிப்படியாக உயர்ந்தவர். 2010 தந்தேவாடா படுகொலை, 2013 ஜிராம் காட்டி தாக்குதல் மற்றும் 2021 சுக்மா-பிஜாப்பூர் தாக்குதல் போன்ற முக்கிய சம்பவங்களில் தொடர்புடையவர்.
இவரது தலைக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை அறிவித்திருந்தன. இந்நிலையில், ஆந்திரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள மாறேடுமில்லி வனப்பகுதியில் ஹிட்மா பதுங்கியிருப்பதை அறிந்த பாதுகாப்புப்படையினர், அவரது குழுவைச் சுற்றிவளைத்தனர்.
பின்னர் அந்த அடர்ந்த வனப்பகுதியில் இருதரப்புக்கும் நடந்த மோதலில் மாவோயிஸ்ட் மத்திய குழுவின் உறுப்பினரும், PLGA பட்டாலியன் எண் 1-ன் தளபதியுமான மாத்வி ஹிட்மா, அவரது மனைவி ராஜீ என்கிற ராஜக்கா உட்பட மொத்தம் 6 மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.
என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















