பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிர், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மீண்டும் மீண்டும் மதச்சாயம் பூசுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அசிம் முனிர், இந்தியா உடனான போரின் போது, பாகிஸ்தான் வீரர்களின் தலையை உயர்த்த அல்லாஹ் உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு முஸ்லிம், அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவனுடைய முயற்சிகள் வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
அசிம் முனிர் இதற்கு முன்பும் போலியான ராணுவ வெற்றிக் கதைகளைப் பரப்பியதற்காகக் கேலிக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளார். ஆபரேஷன் புன்யான்-உன்-மர்சூஸ் என்ற பெயரில் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக ஒரு ராணுவ நடவடிக்கையில் வென்றதாக ஒரு புகைப்படத்தைக் காட்டி, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபை முன்னதாக அசிம் முனிர் நம்பவைத்துள்ளார்.
அந்தப் படம் உண்மையில் 2019ம் ஆண்டு சீன ராணுவப் பயிற்சியின்போது எடுக்கப்பட்டது என்பது இணையதளங்களில் விரைவில் அம்பலமானது. இது மட்டுமின்றி, இந்தியா போர் நிறுத்தத்திற்காகக் கெஞ்சியது என்றும், அமெரிக்கா தலையிட்ட பின்னரே போர் நிறுத்தம் ஏற்பட்டது என்றும் முனிர் முன்பு பொய்யான தகவல்களைப் பரப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலைகளை, மதரீதியாகச் சித்தரிக்கும் அசிம் முனிரின் முயற்சிகளை அரசியல் பார்வையாளர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
















