வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடு கடத்துமாறு வங்கதேச இடைக்கால அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு நாடுகடத்தல் ஒப்பந்தம் இருக்கும் நிலையில் இந்தியா என்ன செய்யப்போகிறது ? என்பதுபற்றிப் பார்க்கலாம்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை என்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துமாறு வங்கதேச இடைக்கால அரசு விடுத்த கோரிக்கையைப் பற்றி நேரடியாக எதுவும் சொல்லாமல் இந்தியா அமைதி காக்கிறது. இந்த விஷயத்தில் முறையான இருதரப்பு விவாதங்கள் தேவை என்று விளக்கியுள்ள மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் தீர்ப்புகுறித்து ஆராய்ந்து வருவதாகவும், இருஅரசுக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தைகள்ம் மூலம் வங்கதேச அதிகாரிகளுடன் இணைந்துபணியாற்றக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா- வங்கதேசம் இருநாடுகளுக்கு இடையே கைதிகள் பரிவர்த்தனை ஒப்பந்தம் இருப்பதாக வங்கதேசம் குறிப்பிட்டுள்ள நிலையில், 1962ம் ஆண்டின் இந்திய நாடு கடத்தல் சட்டம், நாடு கடத்தல் நடவடிக்கைகளை மறுக்கவும், தாமதப்படுத்தவும் அல்லது நிறுத்தவும் மத்திய அரசுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவோ, தீய நோக்கத்தில் நாடுகடத்தல் கோரிக்கை வைக்கப் பட்டாலோ, அது நீதிக்குப் புறம்பாக இருக்கும் பட்சத்தில் நாடுகடத்தலை மத்திய அரசு மறுக்க முடியும் என்றும் அச்சட்டத்தின் பிரிவு 29 தெரிவிக்கிறது. மேலும் எந்த நேரத்திலும் நடவடிக்கைகளை நிறுத்தி நாடுகடத்தும் கோரிக்கைகளைத் திரும்பப் பெறவும் மத்திய அரசுக்கு முழு அதிகாரத்தையும் வழங்குகிறது.
நாடு கடத்தல் கோரிக்கை அரசியல் காரணங்களுக்காக ஒருவரைத் தண்டிக்கும் நோக்கம் கொண்டது என நிரூபிக்கப் பட்டால், அந்தக் கோரிக்கைக்கு மத்தி அரசுத் தடை விதிக்க முடியும் என்றும் பிரிவு 31-ல் கூறப் பட்டுள்ளது. குற்றங்களுக்கு உள்நாட்டில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க இந்தியாவைத் தேர்வுசெய்தால், குற்றவாளிகளை ஒப்படைப்பதை மறுக்கவும் பிரிவு 7-ல் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும், அற்பமான குற்றங்கள் மற்றும் நல்லெண்ணம் இல்லாத கோரிக்கைகளை மறுக்கவும், கூறப்படும் குற்றங்கள் நடந்ததிலிருந்து அதிக நேரம் கடந்துவிட்டாலும், கூறப்படும் குற்றங்கள் முழுவதும் ராணுவ தொடர்புடையதாக இருந்தாலும் நாடுகடத்தலை மறுக்கவும் பிரிவு 8-ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பிரிவு 21, ஐநா சபை மற்றும் சர்வதேச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிடுவதை முற்றிலுமாக தடை செய்கிறது. மேலும், எந்தவொரு கருத்து வேறுபாடும் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையில் மட்டுமே பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட நபர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒப்பந்த வரம்புகளுக்குள் உள்ளதா? வழக்கு நியாயமானதா ? விசாரணை முறையாக நடந்துள்ளதா ? அரசியல் ரீதியாகவோ நியாயமற்றதாகவோ இருக்கும் விஷயத்தில் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுத் தண்டனை பெற்ற தீர்ப்பை எதிர்த்து முறையிடவும் இந்த ஒப்பந்தம் வழிவகை வழங்குகிறது. ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க மறுத்தால் இருநாடு உறவுகளில் சிக்கல் ஏற்படும் என்று வங்கதேசம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள வங்கதேசம் இன்னொரு புறம், சீனா துருக்கி போன்ற நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. எனவே நாடுகடத்தல் கோரிக்கையை மிகவும் கவனமாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுடன் நல்லுறவை பேணிவந்த ஷேக் ஹசீனா, தம்மை இந்தியா கைவிடாது என்ற நம்பிக்கையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையே, வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் தண்டனை பெற்ற நபர்கள் உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்றும், தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் வங்க தேச அதிகாரிகளிடம் சரணடைந்தால் மட்டுமே தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் வங்கதேச சட்டம் கூறுகிறது.
இந்தியாவில் ஷேக் ஹசீனா இருப்பதாலும், நாடு கடத்தல் குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காததாலும் வங்கதேசத்துக்குச் சென்று சரணடைந்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பே இல்லை என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு ‘கேலிக்கூத்து’ என்று கூறி தம் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ள ஷேக் ஹசீனா, அரசியல் உள்நோக்கத்துடன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல என்றும், அந்த அரசின் கீழ் செயல்படும் தீர்ப்பாயமும் சட்டப்படி செல்லாது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்மை ஆட்சியில் இருந்து நீக்க மறைமுக சதிதிட்டம் தீட்டப் பட்டதாகவும் தனது அவாமி லீக் கட்சியை அழிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், தீர்ப்பாயத்தில் தனது சார்பில் வழக்கறிஞர் ஆஜராககூட அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்
. மேலும், நெதர்லாந்தின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தைரியம் முகமது யூனுஸ் அரசுக்கு உள்ளதா ? என்றும் சவால் விடுத்துள்ளார். நாடுகடத்தல் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கே முழு அதிகாரம் இருக்கும் நிலையில் நம்பி வந்த ஷேக் ஹசீனாவை இந்தியா வங்க தேச இடைக்கால அரசிடம் ஒப்படைக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
















