பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பாஜக பிரமுகரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மண்டல செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
பெருங்களத்தூர் ரயில் நிலைய அருகே இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல், செந்திலை ஓட ஓட விரட்டிச் சென்று தாக்க முயன்றனர்.
அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களைக் கண்டதும், மர்மநபர்கள் 4 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த பாஜக நிர்வாகி செந்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
















