தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகளின் விவரங்களை வழங்கக் கோரி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆதித்யசோழன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
இந்தத் தகவல்களை வழங்க லஞ்ச ஒழிப்புத்துறை தர மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் விண்ணப்பம்மீது 12 வாரங்களில் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில், மாநில தகவல் ஆணையர் ஷகீல் அக்தர் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், மனுதாரர் கோரிய விவரங்களை வழங்க முடியாது எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த மாநில தகவல் ஆணையம், தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை ஜனவரி 8ஆம் தேதிக்குள் மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
















