இறந்து 6 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற ஒருவர், மரணத்துக்குப் பிறகு வேறொரு அற்புதமான உலகத்தைப் பார்த்ததாகத் தனது மரண அனுபவத்தைத் தெரிவித்துள்ளார். யார் அந்த நபர்? என்ன நடந்தது ? அவருக்கு ஏற்பட்ட 6 நிமிட மரண அனுபவம் என்ன ? என்பது பற்றி இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
வாழ்க்கையின் முற்றுப்புள்ளிதான் மரணம். பிறந்தவர் இறந்தே ஆக வேண்டும் என்பது நியதி. மரணம்வரை என்ன நடக்கிறது என்பது தெரியும். நமக்கு மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது என்பது தெரியாது. உலகை விட்டுச் சென்ற எவரும் திரும்பி வர முடியாது என்பது தான் கசப்பான உண்மை. ஆனால், மரணத்தின் வாசலில் இருந்து திரும்பி வந்த ஜான் டேவிஸ், தனது மரண அனுபவத்தை விவரித்துள்ளார்.
அது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஜான், சாலையில் ஒரு திருப்பத்தில் அணில் மீது மோதாமல் இருப்பதற்காக வண்டியைத் திருப்பியபோது மரத்தில் மோதிக் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
வலது கைத்தசைகள் பிய்ந்து போனதால், அறுவை சிகிச்சை அவசியம் என்ற நிலையில் ஜானுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நரம்புகள் வழியாகக் கொடுக்கப் பட்ட மயக்க மருந்து, இதயத்தை அடையும் வரை உடல் முழுவதும் மயக்க மருந்து ஊடுருவிச் செல்வதை ஜானால் உணர முடிந்தது. மயக்க மருந்து இதயத்தை அடைந்ததும், அது துடிப்பதை நிறுத்தியதாகவும், தான் கண்களை மூடியதாகவும் உடனே இறந்து போனதாகவும் ஜான் தெரிவித்துள்ளார். இங்குதான் அவரது மரண அனுபவம் தொடங்குகிறது.
கண்களைத் திறந்தபோது, தனது இடது காதில், அருகில் நின்றிருந்த ஒருவர் தன்னிடம் பேசிக் கொண்டிருந்ததாக ஜான் கூறியுள்ளார். ஒருபோதும் தான் பார்த்திராத அந்த நபர், முழு மரண அனுபவத்திலும், என்ன பார்க்கிறேன், யாரைப் பார்க்கிறேன் என்பதை தன்னிடம் விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தார் என்றும் ஜான் தெரிவித்துள்ளார். மரண அனுபவத்தில் தான் பார்த்ததிலும் செய்ததிலும் தான் முழுமையாக மூழ்கியிருந்ததாகவும், அறுவை சிகிச்சைபற்றி மறந்துவிட்டதாகவும் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
மிக அழகான பளிங்குக் கட்டிடத்தின் ஒரு நடைபாதையில் நின்று கொண்டிருந்ததாகவும், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அந்த நடைபாதை நீண்டிருந்ததாகவும், அவருக்கு இடது பக்கத்தில், அழகான பளிங்கால் வெட்டப்பட்ட அழகாக அலங்கரிக்கப்பட்ட சுரங்கப்பாதை கதவுகள் இருந்ததாகவும், அந்தக் கதவுகளின் வலதுபக்கத்தில் சுமார் நான்கு அடி தொலைவில், நான்கு பெஞ்சுகளுடன் சதுர மேசைகளும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உடனிருந்த நபர் சுரங்கப்பாதைக்குள் சென்று பார்க்கச் சொன்னதாகவும், சென்று பார்த்ததாகவும் கூறியுள்ள ஜான், சுரங்கப்பாதைக்குள் நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் விண்மீன் மண்டலங்கள் எல்லாம் இருப்பதை கண்டு அதிசயித்ததாகவும் தெரிவித்துள்ளார். உடலை விட்டுப் பிரிந்த உயிர்கள் இறந்தபின் கடந்து செல்லும் சுரங்கப்பாதைகள் இது என்பது தனக்கு புரிந்ததாகக் கூறும் ஜானை, இடது பக்க வாசலைப் பார்க்கும்படி அருகில் இருந்த நபர் சுட்டிக் காட்டியதாகவும், அங்கே, 80 வயதுடைய ஒருவர் இடது மார்பை வலது கையால் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் இருப்பதைக் கண்டதாகவும் அப்போது உடனிருந்த நபர், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தனக்கு விளக்கியதாகவும் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
வாசலுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண் அந்த நபரை உள்ளே வரவேற்பதையும் அவரது கையைப் பிடித்ததையும் உடனே 80 வயதுடைய நபர் 20 வயதான இளைஞராக மாறுவதையும் பார்க்க முடிந்ததாக ஜான் தெரிவித்துள்ளார். ஒரு பரந்த தோட்டத்தில், தான் நேசித்த இரண்டு நாய்கள் மற்றும் இரண்டு பூனைகள் வரவேற்க ஒரு மலையிலிருந்து கீழே ஓடுவதைக் கண்ட ஜான், சிவப்பு நிறப் பட்டையுடன் கூடிய மேலங்கியில் ஒளிரும் உருவத்தைச் சந்தித்ததாகவும் கூறியுள்ளார். மரணம் என்ற ஒன்று இல்லை என்று அந்த உருவம் கூறியபோது, மருத்துவமனையில் கண்திறந்து பார்த்ததாக ஜான் கூறியுள்ளார்.
மருத்துவ ரீதியாக ஆறு நிமிடங்கள் மட்டுமே ஜான் இறந்திருந்தாலும், அந்த அனுபவம் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்ததாக தெரிவித்துள்ளார். மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவம் என்பது உண்மையான மரணம் அல்ல, அது மருத்துவ மரணம் ஆகும். அப்போது இதயம் நின்றுவிடுகிறது அவ்வளவு தான். உடல் நிலையைப் பொறுத்து இதயம் இரத்தத்தை வழங்காத போதும் மூளை பல நிமிடங்கள் வாழ முடியும். பொதுவாக ஐந்து நிமிடங்கள் உயிர்வாழ வரை முடியும்.
உண்மையில் இறந்து விடவில்லை என்பதால், நரம்பியல் தூண்டுதல்கள், நினைவுகள் மற்றும் புலன்களால் பிடிக்கக்கூடியவற்றின் அடிப்படையில் மீண்டும் நினைத்த உருவங்களை உருவாக்க முடியும். மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்கள் பொதுவான கருப்பொருள்களைக் கொண்டிருப்பதை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவில் 15 சதவீத தீவிர சிகிச்சை நோயாளிகள் இத்தகைய அனுபவங்களைப் பெற்றுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால்தான் மருத்துவ மரணத்தில் ஒருவர் ஒரு மூடிய கதவைப் பார்க்கிறார். இன்னொருவர் “சொர்க்கத்திலிருந்து” தள்ளி வைக்கப்படுவதாக உணர்கிறார். மற்றொருவர் வெளிச்சத்திற்குச் செல்கிறார். கத்தோலிக்கர்கள் மரியாளைப் பார்க்கிறார்கள், புராட்டஸ்டன்ட்டுகள் இயேசுவைப் பார்க்கிறார்கள், இந்துகள் ஈசனை விஷ்ணுவை பார்க்கிறார்கள்.
நாத்திகர்கள் ஒளியை மட்டுமே பார்க்கிறார்கள் மரணத்திற்குப் பிந்தைய அனுபவ ஆராய்ச்சி அறக்கட்டளைஎ ன்ற அமைப்பு மரணத்தின் வாசலில் சென்று திரும்பியவர்களின் கதைகளைச் சேகரித்து வருகிறது. அதில் ஜான் டேவிஸ் கதையும் இருக்கும்.
















