சட்டவிரோத கிட்னி விற்பனை புகாரில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் மோகனின் ஜாமின் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கிட்னி விற்பனை தொடர்பான புகாரில் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட திராவிட ஆனந்த், மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைத்தரகர் மோகன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத கிட்னி விற்பனைக்கும், தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், சட்டவிரோதமாகக் கிட்னி விற்கப்படுவதை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என வாதிடப்பட்டது.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இடைத்தரகர் மோகனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
















