திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட கோரிய வழக்கில், தர்கா தரப்பினர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், திருப்பரங்குன்றம் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கார்த்திகை தீப விவகாரத்தில் பிற மதத்ததை சேர்ந்த யாரும் போராடாத நிலையில், தமிழக அரசும், அறநிலையத்துறையும் பிரச்சனை எழும் என கூறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், கார்த்திகை தீபத்தை ஏற்ற உரிமையியல் நீதிமன்றத்தையே நாட வேண்டும் எனவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை தர்கா தரப்பு மற்றும் தொல்லியல்துறையை எதிர்மனுதாரராக சேர்க்கவும், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















