சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வசதிகளுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணப்படும் கூட்டநெரிசல் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது முதலே கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுவதாகவும், இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்பே செய்யாதது ஏன் எனவும் வினவினர்.
ஆறு மாதங்களுக்கு முன்பே பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம் எனக்கூறிய நீதிபதிகள், தேவசம் போர்டின் அதிகாரிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே கூட்டநெரிசலுக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேவசம் போர்டு ஏன் பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்களை மலையேற அனுமதித்தது ஏன் எனவும் வினவினர்.
மேலும், ஒரே இடத்தில் பக்தர்களை தேக்கி வைப்பது ஆபத்தானது எனக்கூறிய நீதிபதிகள்,
நெரிசலைக் கட்டுப்படுத்த பக்தர்களை சிறிய குழுக்களாக பிரித்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினர்.
















