கோவை, மதுரை மெட்ரோ திட்டம் தொடர்பாக கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தை, பிரதமர் வருகையின் போது வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ள நிலையில், திமுக அரசு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னையை தொடர்ந்து மதுரையில் 11,360 கோடி ரூபாயில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான சுமார் 32 கிலோ மீட்டர் துாரத்துக்கும், கோவையில் 10,740 கோடி ரூபாயில் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது.
இதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் கூடுதல் ஆவணங்களுடன், திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியையும் மேற்கொண்டது.
இதனிடையே அந்நகரங்களில் 20 லட்சத்துக்கும் குறைவாக மக்கள்தொகை இருப்பதை முதன்மையான காரணமாக கூறி, கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மத்திய வீட்டு வசதி நகர் மேம்பாட்டு அமைச்சகம் எழுதிய கடிதம், கடந்த 14-ம் தேதியே கிடைத்த நிலையில், அப்போது மவுனம் காத்த தமிழக அரசு நேற்று முன்தினமே கடிதத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் வெளியிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
மெட்ரோ விவகாரம் தொடர்பான கடிதத்தின் சிறுபகுதி பிரதமரின் வருகையையொட்டி வெளியிடப்பட்டிருப்பதால், திமுக அரசு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.
















