சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல்மணிகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் சேமித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிக அரசு கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மூட்டைக்கு 55 ரூபாய் வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பணம் வழங்கினாலும், நெல்மணிகளை கொள்முதல் செய்ய 20 நாட்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்மணிகளின் தினசரி ஈரப்பதத்தை பராமரிக்கப் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்து வருவதாகவும், தேக்கி வைக்கப்படும் நெல்மணிகளின் எடை குறைவதால் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்காலிக நிலையத்தில் சேமித்து வைத்துள்ள நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், பணம் வசூலிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















