இந்தோனேசியாவின் ஜாவாவில் அமைந்துள்ள மவுண்ட் செமெரு எரிமலை வெடித்து பல ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன.
இங்கு, எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 130 எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள மவுண்ட் செமெரு அவ்வப்போது வெடித்து சாம்பல் புகையை வெளிப்படுத்தி வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 676 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை இந்தோனேசியாவின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும்.
இந்நிலையில் மவுண்ட் செமெரு தற்போது வெடித்துள்ளதால் சூடான வாயுக்கள், எரிமலை சாம்பல் எனப்படும் பைரோகிளாஸ்டிக் ஓட்டம் அதிகரித்துள்ளது.
பல ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகைகள் வெளியேறி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் செய்வதறியாகத் திகைத்து வருகின்றனர்.
















