மலேசியாவின் சுங்கை பெட்டாணியில் கழிவறையின் மேல் பதுங்கி இருந்த 60 கிலோ எடையுள்ள மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
மலேசியாவின் சுங்கை பெட்டாணியில் உள்ள தாமான் பந்தர் பாருவில் குடியிருப்பு ஒன்றில் வீட்டின் கழிவறையின் மேற்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாகப் பாம்பு பிடிக்கும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பு பதுங்கி இருந்த மேற்கூரையை இரும்பு கம்பியைக் கொண்டு வேகமாக அடித்துப் பாம்பினை வெளியே வரச் செய்தனர்.
சுமார் பத்து அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு தலை மற்றும் வால் பகுதியை வெளியில் நீட்டி நெளிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து வனத்துறையினர் கொக்கி போன்ற இரும்பு கம்பியினை கொண்டு கழிவறையின் மேற்பகுதியிலிருந்து மலைப்பாம்பினை தரையில் விழச் செய்தனர்.
சுமார் 60 கிலோ எடையைக் கொண்ட மலைப்பாம்பை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்த வனத்துறையினரின் வீடியோ வைரலாகி உள்ளது.
















