2027 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கு மத்தியில், வெளிநாட்டுப் பொருட்களுக்கான இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்கவும் பரந்த சுதேசி உற்பத்திக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
வெளிநாட்டு பொருட்களைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், கணிக்க முடியாத உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளை சரியாக வழிநடத்துவதற்கும், மத்திய அரசு பரந்த சுதேசி உற்பத்திக் கொள்கையை பரிசீலித்து வருகிறது. 2027 பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும், தேசிய உற்பத்தி மிஷனின் நோக்கத்தை பரவலாக்குவதற்கும் வழிகளை ஆராய்வதற்கான பணிகளும், கலந்துரையாடல்களும் மத்திய அமைச்சகங்களுக்கு இடையே தொடங்கியிருக்கின்றன.
இதன்மூலம் சுதேசி கொள்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகப் பல்வேறு திட்டங்கள் வரும் பட்ஜெட் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான இந்திய ஏற்றுமதிகள் அமெரிக்காவில் 50 சதவீத வரிகளை எதிர்கொண்டுள்ள காலகட்டத்தில், பரந்த உற்பத்திக் கொள்கைக்கான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அரிய-பூமி காந்தங்களை வாங்குவது சவாலானதாக மாறியுள்ளது, முக்கிய விநியோகஸ்தரான சீனா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதே இதற்குக் காரணம். அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பிற பொருளாதாரங்களும், அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா பல நாடுகளுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அண்மையில் பேசிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவை உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்துறை மையமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்தியா போட்டித்தன்மை வாய்ந்த உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டும் என்றும், தன்னிறைவையும் பெற வேண்டும் என்று கூறினார். தொழில்நுட்பம் அல்லது திறனில் உள்ள இடைவெளிகள் காரணமாகச் சில தயாரிப்புகள் இன்னும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விநியோகச் சங்கிலி பாதிப்புகளை கவனமாக மதிப்பிட வேண்டும் என்றும் எச்சரித்தார்.
வர்த்தகம் ஆயுதமயமாக்கப்படக்கூடிய உலகளாவிய சூழலில், இந்தியத் தொழில்துறையினர் ஒரு புவியியல் அல்லது விநியோகஸ்தரை அதிகமாகச் சார்ந்து இருக்கிறார்களா என்பதை ஆராயுமாறு கோயல் வலியுறுத்தினார். முக்கியமான பொருட்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் அபாயங்களைக் குறிப்பிட்டு, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக வளர்ப்பது தேசிய நிகழ்ச்சி நிரலில் அதிகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஏற்கனவே பிரதமர் மோடி சுதேசி கொள்கையில் உறுதியாக உள்ள நிலையில், நாடு முழுவதும் அதற்கான அலைவீச தொடங்கியுள்ளது… பட்ஜெட்டில் அதற்கான ஊக்கம் அளிக்கப்படும் பட்சத்தில் சுதேசி உற்பத்திக் கொள்கை பட்டிதொட்டியெங்கும் பளிச்சிடும் என்றே கூறலாம்.
















