உடனடி தரிசனம் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத வகையில் இருந்தது. கடந்த 18ஆம் தேதி கூட்டநெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
இதனை தொடர்ந்து, நவம்பர் 20 முதல் 24ஆம் தேதி உடனடி தரிசனத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 20ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசனம் என மொத்தம் 75 ஆயிரம் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக தேசவம் போர்டு தெரிவித்துள்ளது.
வண்டிப்பெரியார் மற்றும் நிலக்கல் ஆகிய 2 இடங்களில் மட்டும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உடனடி தரிசனத்தை நம்பியிருக்காமல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும் என தேசவம்போர்டு வலியுறுத்தியுள்ளது.
















