திருச்சி அருகே போதை மறு வாழ்வு மையம் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அதவத்தூர் நேருஜி நகரில் செயல்பட்டுவரும் போதை மறுவாழ்வு மையத்தில், கணபதி என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதற்குப் பின்னரும் கணபதி மது அருந்தி வந்துள்ளார்.
வழக்கம்போல, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த கணபதி, தான் சிகிச்சையில் இருந்தபோது அங்குள்ள ஊழியர்கள் தன்னை தாக்கியதாக அவர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, தனது நண்பர்களுடன் போதை மறு வாழ்வு மையத்திற்கு சென்ற அவர், மையத்தின் கதவுகள், ஜன்னல்களை அடித்து நொறுக்கினார்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் கணபதி, கல்லணை குணா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த வார்டன் மணிமாறன் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
















