இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில், காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பால் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் தற்காப்பு படைகள் கண்டுபிடித்துள்ளன.
25 மீட்டர் ஆழத்தில், சுமார் 7 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தச் சுரங்கப்பாதையில் 80-க்கும் மேற்பட்ட மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹமாஸின் இந்தப் பிரமாண்ட சுரங்கப்பாதை, காசாவின் தெற்குப் பகுதியான ரஃபாவின் அடர்த்தியான மக்கள் வசிக்கும் பகுதிக்குக் கீழே செல்கிறது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை வளாகம், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளுக்குக் கீழேயும் இந்தச் சுரங்கப்பாதைகள் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுரங்கத்தையை ஹமாஸ் தளபதிகள், ஆயுதங்களைச் சேமிக்கவும், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை திட்டமிடவும், நீண்டகாலம் தங்குமிடமாகவும் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
அதிர்ச்சியூட்டும் தகவலாக, கடந்த 2014ம் ஆண்டு இஸ்ரேல் – ஹமாஸ் போரில் கொல்லப்பட்ட லெப்டினன்ட் ஹடார் கோல்டின் என்பவரின் உடல் எச்சங்கள் இங்குதான் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இவருடைய உடல் எச்சங்கள் இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டன. லெப்டினன்ட் ஹடார் கோல்டின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கருதப்படும் மார்வான் அல்-ஹம்ஸ் என்ற ஹமாஸ் பயங்கரவாதியையும் ஐ.டி.எஃப். கைது செய்து விசாரித்து வருகிறது.
இஸ்ரேல் கடற்படை மற்றும் யாஹலோம் போர் பொறியியல் பிரிவு ஆகியவை இணைந்து கண்டுபிடித்த இந்தச் சிக்கலான மிகப்பெரிய சுரங்கப்பாதை, ஹமாஸ் அமைப்பின் ஒரு முக்கிய கதவு அடைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
















