ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி20 அமைப்பின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னர்ஸ்பர்க் நகரைச் சென்றடைந்தார். அப்போது, தென்னாப்பிரிக்கா அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனமாடிய பழங்குடியின பெண்கள் தரையில் விழுந்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்தினர்.
இதனையடுத்து விமான நிலையத்தில் கூடியிருந்த இந்தியா வம்சாவளியினர் பாரம்பரிய நடனமாடி வரவேற்பு அளித்தனர். பின்னர், தேசியக்கொடியுடன் காத்திருந்த இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்து கைகளை குலுக்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி, காலநிலை மாற்றம், எரிசக்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















