தாமிரபரணி தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு 1 லிட்டர் ஒரு பைசாவுக்கு விற்பனை செய்வதா என நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீர் வரி பாக்கியை வசூலிக்க கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இது குறித்த விசாரணையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ஒரு பைசா என்ற வீதம் வசூலிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை தரப்பில் கூறப்பட்டது.
அப்போது, தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், ஆனால், அவர்களிடம் ஒரு லிட்டருக்கு ஒரு பைசா தான் வசூலிக்கிறீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஏன் இன்னும் உயர்த்தவில்லை என்றும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.
















