இமாச்சலப் பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட விபத்தினால் நினைவுகளை இழந்த நபருக்கு சமீபத்தில் மீண்டும் தலையில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக நினைவுகள் திரும்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள நாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரிக்கிராம். இவர், 1980ல் ஹரியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய இவருக்கு, ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு, நினைவுகள் முழுவதும் மறந்தது.
நினைவுகளை இழந்த ரிக்கிராம், மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் பகுதிக்குச் சென்று, அங்கு ரவி சௌத்ரி என்ற புதிய பெயருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ஒருவரை மணந்து, மூன்று குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வந்த ரிக்கிராமுக்கு இவ்வளவு காலமும் அவருடைய பழைய வாழ்க்கை பற்றிய எந்த நினைவுகளும் வரவில்லை.
இதற்கிடையில், மகனைத் தேடிச் சலித்த அவரது பெற்றோர், அவர் உயிருடன் இருக்கிறார் என்று அறியாமலேயே இறந்துவிட்டனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அவருக்கு மீண்டும் தலையில் சிறு காயம் ஏற்பட்டு, ஆச்சரியப்படும் விதமாக அவருடைய இழந்த நினைவுகள் திரும்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி, குழந்தைகள் மூலம் அவரது சொந்த ஊரில் உள்ள காபி கடையின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து, அதன் மூலம் சில கிராம மக்களுடன் பேசிய ரிக்கிராம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்குச் சென்றார். நீண்ட நாட்கள் காணாமல் போன ரிக்கிராமை அவரது உடன்பிறந்தோர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
















