உள்நாட்டுப் போர் விமானத் திட்டத்தில் ஒரு மகத்தான திருப்புமுனையாக, தேஜஸ் Mk2 விமானத்திற்காக எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் ஒரு புதிய ரேடாரை இந்தியா உருவாக்கியுள்ளது.
போர் விமானங்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா போன்ற அயல் நாடுகளையே நம்பியிருந்த இந்தியா, தற்போது தங்களுக்கெனச் சொந்த போர் விமானம் வேண்டும் என்ற நோக்கில் தேஜஸ் விமானத்தை தீவிரமாகத் தயாரித்து வருகிறது.
அதற்காக உருவாக்கப்பட்டு வரும் தேஜஸ் Mk2 விமானம், 2027ல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தப் போர் விமானத்தில் வழக்கமான ரேடார்களை பயன்படுத்தாமல், இதற்கெனப் பிரத்யேகமான ரேடார் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு உத்தம் Mk2 AESA எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரேடார் வழக்கமான ரேடார்களை போன்று நிலையாக இல்லாமல், swashplate mechanism என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
இது ரேடார் அடுக்கை உடல் ரீதியாக நகர்த்த உதவுகிறது. இதன்மூலம், விமானம் தனது திசையை மாற்றாமலேயே, 140 டிகிரி பரப்பிற்குள் வரும் இலக்குகளைக் கூடக் கண்காணிக்க முடியும்.
இதனால், பார்வைக்கு அப்பாற்பட்ட தாக்குதலின்போது, விமானி எதிரியின் ஏவுகணைகளிலிருந்து தப்பவும், அதே நேரத்தில் இலக்கைத் தாக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், ஒரே நேரத்தில் 64 வான்வழி இலக்குகளைக் கண்காணிக்கவும், அவற்றில் ஆறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கவும் முடியும் என்பதால், போர் விமானங்களில் இந்த ரேடார் ஒரு கேம் சேஞ்சராக மாறுகிறது.
இது, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் வான் வலிமைக்கு ஒரு பெரிய பலமாக அமையும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
















