இந்தியாவிற்கும், தென்னாப்ரிக்காவிற்கும் இடையிலான கலாசார தொடர்பு காலத்தால் அழியாதது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 அமைப்பின் 20-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னர்ஸ்பர்க் நகருக்கு சென்றுள்ளார். அங்குள்ள வாட்டர்க்லூப் விமானப்படை தளத்தில் அவருக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலைஞர்கள் கலாசார பாடல்களை பாடி, நடனமாடிஅவரை வரவேற்றனர். அப்போது, ‘கங்கா மையா’ என்ற தமிழ் பாடல் பாடப்பட்டது. இதனை மெய்மறந்து பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.
இதனையடுத்து, கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம் மற்றும் பிற தெய்வீக பிரார்த்தனைகளுடன் இந்திய வம்சாவளியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜோகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் ‘கங்கா மையா’ நிகழ்ச்சியைக் கண்டது தனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்ததாகவும், இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், மற்றொரு பதிவில், இந்தியாவிற்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான கலாசார தொடர்பு உண்மையிலேயே மனதைத் தொடும் மற்றும் காலத்தால் அழியாதது என பதிவிட்டுள்ளார்.
















