கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் SIR பணி காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கிராம உதவியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அஞ்சலி செலுத்தினார்.
திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையை சேர்ந்த ஜாஹிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்தார். SIR பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஜாஹிதா பேகம் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜாஹிதா பேகம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த குமரகுரு, SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
தங்களுக்கு ஏற்றார்போலப் பணி செய்ய வற்புறுத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஜாஹிதா பேகம் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய அவர், இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
















