விசாரணைக்குச் சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
தன் மீது பொய்யாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ் மொழியில் விசாரணை நடத்தப்பட்டு தமிழ் மொழியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வாய்ப்பில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும், மனுதாரர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களோ, சான்றுகளோ இல்லை எனவும், விசாரணை நீதிமன்றம் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல் ஐபிஎஸ் அதிகாரி மீது இயந்திரத்தனமாகச் செயல்பட்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து, நெல்லை மாவட்ட நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டுப் பதிவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, அதனடிப்படையில், வழக்கு விசாரணையை மேற்கொள்ளவும் இடைக்கால தடை விதித்து விசாரணையை வரும் ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
















