டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில், தற்கொலைப்படை பயங்கரவாதிக்குத் துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது அம்பலமாகியுள்ளது.
குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை பயங்கரவாதி டாக்டர் உமர் உன் நபி, கடந்த 2022ம் ஆண்டு சுமார் 20 நாட்கள் துருக்கியில் தங்கியிருந்தபோது, சிரியா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பு, தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் உகாஷா என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபரின் அறிவுறுத்தலின் பேரில் நடந்ததாகக் கூறப்படுகிறது. உகாஷா தற்போது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.
உமர், சக குற்றவாளிகளான மருத்துவர்கள் முஸம்மில் ஷகில் மற்றும் முஸாஃபர் ரேத்தர் ஆகியோருடன் சேர்ந்து, டெலிகிராம் மூலம் ஃபைசல், ஹாஷிம் மற்றும் உகாஷா ஆகிய மூவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் வெடிகுண்டுத் தயாரிப்பு வீடியோக்கள் மற்றும் வெடிபொருள் சம்பந்தப்பட்ட பொருட்களை பரிமாறியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மருத்துவர்களான முஸம்மில், டாக்டர் ஆதில் அகமது ரேத்தர், டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் முஃப்தி இர்பான் ஆகியோர் டெல்லி சதியில் முக்கியப் பங்கு வகித்ததுடன், இந்தியா முழுவதும் பல தொடர் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, தற்கொலைத் தாக்குதலுக்கான வாகனத்தை வாங்க உதவிய ஆமிர் ரஷித் அலி மற்றும் ட்ரோனை ராக்கெட்டாக மாற்றிய ஜாசீர் பிலால் வானி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விசாரணை பாகிஸ்தானுடன் நிற்காமல், துருக்கி மற்றும் சிரியா வரை நீண்டுள்ளது என்ற கவலையை இந்தியப் புலனாய்வு அமைப்புகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
















