சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் போன்ற துறைகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ. செயல்படுத்துவதால், அதன் நிதி இருப்பு காலியாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முழுமை திட்டம் தயாரிப்பது, விரிவான வளர்ச்சி திட்டம் தயாரிப்பது, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது ஆகியவை அதன் பிரதான பணிகளாக உள்ளன.
ஆனால், சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் போன்ற துறைகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ. செயல்படுத்துவதால், அதன் நிதி இருப்பு காலியாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுபற்றிப் பேசிய நகரமைப்பு வல்லுனர்கள், கோயம்பேடு சந்தை, பேருந்து நிலையம், சாத்தாங்காடு அங்காடி வளாகம் ஆகியவற்றை சி.எம்.டி.ஏ. செயல்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர்.
இதில் மனைகள், கடைகள் விற்பனை செய்ததில் சி.எம்.டி.ஏ-வுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் நிதி இருப்பு உயர்ந்ததாகவும், கட்டட அனுமதி வாயிலாக ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்ததாகவும் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் கட்டமைப்புத் திட்டங்கள் அதிகரித்ததால், நிதி இருப்பு வேகமாகக் காலியாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விரிவாக விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக் கழக நகரமைப்பு துறை முன்னாள் பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன், 2 ஆண்டுகளாகச் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட அரசுத் துறைகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ. செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
பணிகள் தடம் மாறியதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறியுள்ள அவர், சட்டப்படி வகுக்கப்பட்ட திட்டங்களில் சி.எம்.டி.ஏ. கவனம் செலுத்த அரசு அறிவுறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
















