பாகிஸ்தான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான JF-17C Block-III போர் விமானங்களை அஜர்பைஜானுக்கு விற்பனை செய்துள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா, அர்மேனியாவுடன் பல பில்லியன் டாலர் மதிப்பிலான Su-30MKI போர் விமான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தியுள்ளது.
2020 மற்றும் 2023 நாகோர்னோ-கராபாக் மோதல்களில் அசர்பைஜானிடம் அடைந்த தோல்விகளுக்குப் பிறகு, ராணுவ சமநிலையற்ற தன்மையைக் குறைக்க அர்மேனியா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவுடனான Su-30MKI போர் விமான ஒப்பந்தத்திற்கு அர்மேனியா முனைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இது அர்மேனியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ராணுவக் கொள்முதலாக இருக்கும். அர்மேனியாவுக்கு Su-30MKI விமானங்கள் 2027ம் ஆண்டு முதல் விநியோகிக்கப்படலாம் என்றும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அர்மேனியாவின் தேவைக்கேற்ப பிரத்யேகமான ஏற்றுமதி வகையைத் தயாரிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அஜர்பைஜானின் JF-17 விமானங்களை எதிர்கொள்ளும் வகையில், அர்மேனியாவிற்கான Su-30MKI போர் விமானங்கள் அதிநவீன அம்சங்களுடன் வரவுள்ளன.
இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான உத்தம் AESA ரேடார், பார்வைக்கு அப்பாற்பட்ட தாக்குதல் திறன் கொண்ட அஸ்திரா ஏவுகணைகள் மற்றும் அதிநவீன மின்னணுப் போர் சூட்களும் இதில் அடங்குகின்றன. இந்த ஒப்பந்தம் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















