ஆரோவில்லின் சர்வதேச வளாகத்தில் ஜெர்மனிக்கான இரண்டு கலாச்சார வளாகங்கள் அமைக்கப்படும் என ஆரோவில்லின் நகர திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் மைகேல் ஹாஸ்பர், இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆரோவில் ஃபவுண்டேஷன் அலுவலகத்தைப் பார்வையிட்டார்.
அப்போது ஆரோவில்லின் மூத்த ஆலோசகர் தர்மேஷ் சந்திர கோயல், மற்றும் அன்ஷுமன் பாசு ஆகியோர் உடன் இருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆரோவில்லின் எதிர்காலத் திட்டங்கள், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் மனித ஒற்றுமை, உலக சகோதரத்துவம் மற்றும் ஆன்மீகம் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது. பின்னர், ஆரோவில்லின் மாஸ்டர் பிளான் மற்றும் எதிர்கால மேம்பாடுகள் பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது ஆரோவில்லின் சர்வதேச வளாகத்தில் ஜெர்மனிக்கான இரண்டு கலாச்சார வளாகங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. காணொலி வாயிலாக ஆரோவில் ஃபவுண்டேஷன் செயலரும், குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, I.A.S., கலந்து கொண்டார்.
அப்போது, தன்னார்வலர்கள், இன்டர்ன்கள், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் உறுதியாக்கும் என்றும் வலியுறுத்தினார்.
















