கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நள்ளிரவில் தனது பசியை புரிந்து கொண்டு சான்விச் வாங்கி கொடுத்த கார் ஓட்டுநரின் செயல் குறித்து நெகிழ்ந்த இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான நிலையத்துக்குக் காரில் சென்றுள்ளார். அப்போது தனது தோழியிடம் செல்போனில் பேசிய இளம்பெண், தனக்கு விமானம் நள்ளிரவு 2 மணிக்குத் தான் எனவும், தனக்கு மிகவும் பசிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்ட கன்னட மொழி பேசும் ஓட்டுநர், உடனடியாக காரை நிறுத்தி அருகிலிருந்த கடையில் சான்விச் வாங்கி வந்து இளம்பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
மேலும், தனது சகோதரி இப்படி பசியில் இருந்தால் இதை தான் செய்திருப்பேன் எனவும் கார் ஓட்டுநர் கூறியுள்ளார்.
இதனை கேட்டு நெகிழ்ச்சி அடைந்த இளம்பெண், இந்தக் கருணையை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் எனக்கூறி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் கார் ஓட்டுநரின் செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
















