உணவுப் பொருட்கள் மற்றும் சர்க்கரை பானங்கள்மீது “ORS” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை அனைத்து உணவுத் தயாரிப்பு நிறுவனங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உண்மையில் ORS என்றால் எது ? ORS இல்லாதது எது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலக சுகாதார மையமும் UNICEF என்ற ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமும் உருவாக்கிய ORS எனப்படும் Oral Rehydration Solution என்பது நீர்ச்சத்தைக் கொடுக்கும் எளிய உயிர்காக்கும் ஒரு முக்கிய சிகிச்சை முறையாகும். வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி, வெப்பம் தொடர்பான நோயால் உடலில் ஏற்படும் நீர்ச் சத்து குறைவு சிகிச்சையாக உலகமெங்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
சர்வேதேச அளவில் வயிற்றுப்போக்கு நோயால் மரணத்தின் விளிம்புக்குச் சென்ற மில்லியன் கணக்கான குழந்தைகளின் உயிரை ORS காப்பாற்றியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பழச் சாறு பானங்கள், சர்க்கரை பானங்கள், எலக்ட்ரோலைட் பானங்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் என எல்லா பானங்களும் ‘ORS’ லேபிளை ஒட்டிச் சந்தையில் விற்கப்பட்டு வந்தது. இந்தியாவில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு ஒரு முக்கியமான காரணமாக வயிற்றுப்போக்கு உள்ளது.
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களில் ‘ORS’ லேபிளை ஒட்டி விற்பனை செய்தால், அதைக் குடிக்கிற குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு லிட்டர் ORS-ல், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும்.
ஆனால், ‘ORS’ லேபிளை ஒட்டி விற்பனை செய்யப்படும் சர்க்கரை பானங்களில் ஒரு லிட்டருக்கு 120 கிராம் சர்க்கரை இருக்கிறது. மேலும், நீர்ச் சத்து குறைவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் எலக்ட்ரோலைட்ஸ் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. ஆதாரத்துடன் இதை நிரூபித்த தெலுங்கானாவை சேர்ந்த டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், சர்க்கரை பானங்களில் ‘ORS’ லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்ட ரீதியாகப் போராடி வருகிறார்.
கடந்த 2022ம் ஆண்டில் இது தொடர்பாகத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். தெலுங்கான உயர் நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் 14ம் தேதி ‘ORS’ தொடர்பாக உணவு நிறுவனங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், ‘ORS’ தரம் இல்லாத எந்தவொரு உணவுப் பொருளையும் ‘ORS’ என்ற பெயரில் விற்கக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் கீழ் சில்லறை விற்பனை மற்றும் மின் வணிக தளங்களில் இருந்து ‘ORS’ தரம் இல்லாத ஆனால் ‘ORS’ லேபிள் ஒட்டிய பானங்களை உடனடியாக அகற்ற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மின் வணிக தளங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு “ORS” என்ற வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்தும் தயாரிப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை உடனடியாக அகற்றி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். “ORS” என்று பெயரிடப்பட்ட பானங்களில் உலக சுகாதார மையத்தின் தர நிலைகளுக்கு ஏற்ப உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என்றும் அல்லது மருந்தாளுநர்களிடம் சொல்லி ORS வாங்கவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















