பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது என குடியரசு முன்னாள் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு ஜெக்தீப் தன்கர் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்று புத்தக வெளியீட்டு விழாவில் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களால் நாகரிக முறையில் மோதல் போக்கு நிலவி வருவதாக கூறினார். மன உறுதி, ஆன்மிகம், அறிவு ஆகியவற்றில் இருந்து சிலர் விலகிச் செல்வது வருத்தம் அளிக்கிறது எனக்கூறிய அவர், நம் நாட்டின் ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக மரபுகளில் இருந்து வலிமையைப் பெற வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
மேலும், ஒருவரின் மனதையும், செயல்பாட்டையும் குழப்பும் வகையில் பொய் கதைகள் என்னும் சக்கரவியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது என தெரிவித்த ஜெகதீப் தன்கர், இதுபோன்ற நிலையில் யாரையும் சிக்காமல் கடவுள் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.
















