கேரளாவில் விபத்தில் சிக்கிய மணமகளுக்கு மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய மணமகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா முதலசேரி பகுதியை சேர்ந்த ஆவணி என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும், தும்போலி பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இருவருக்கும் ஆழப்புழாவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண நாளன்று மணமகள் அழகு நிலையத்துக்கு காரில் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் கார் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியதில் ஆவணி படுகாயமடைந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த மணமகள் ஆவணி உட்பட இருவர் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற மணமகன் ஷாரோன், படுக்கையில் இருந்த ஆவணிக்கு அவரது சம்மதத்துடன் தாலி கட்டினார். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















