பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால், சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்கிறது என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் விழா கடந்த 13ஆம் தேதி கோலாகமாக தொடங்கியது. சத்ய சாய்பாபாவின் பிறந்த நாளான நவம்பர் 23ஆம் தேதி சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள், தங்கத் தேரோட்ட பவனியும் விமரிசையாக நடைபெற்றன. இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கையும், அர்ப்பணிப்பும் உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களை சேவையாற்றுவதற்கு ஊக்குவித்து வருகிறது என கூறினார்.
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக என்.டி.ராமராவ், எம்ஜிஆர் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கப்பட்டது என்றும், அந்த திட்டத்தை மறு உருவாக்கம் செய்து மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க ஸ்ரீ சத்ய சாய்பாபா முன்னின்று ஆசி வழங்கினார் எனவும் கூறினார்.
மேலும், ஆந்திரா, தமிழக மக்களிடையே நல்லுறவு நீடிக்கவும் இந்த உதவியே காரணம் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
















