உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சூர்யகாந்த் வழங்கிய முக்கிய தீர்ப்புகளின் விவரங்களை பார்க்கலாம்…
2019 முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த சூர்யகாந்த் கடந்த 6 ஆண்டுகளில் முக்கியமான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளின் ஒருவராக விளங்கியுள்ளார்.
அதன்படி, காலனித்துவ காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்ய வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருந்தார்.
நாட்டியே அதிர வைத்த “பெகாசஸ்” உளவு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தொழில்நுட்ப குழுவை அமைத்து உத்தரவிட்ட அமர்வில் நீதிபதியாக இடம் பெற்றார்.
தன் பாலின திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு நீதிபதியாக இருந்தார். 2024ல் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வை நடத்தும்படி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 370 நீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் எனும் திட்டத்தை உறுதி செய்ததோடு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். இணைய சேவையை கால வரையறையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும், இணைய அணுகல் என்பது பேச்சுரிமையின் ஒரு பகுதி என்று தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு தொடர்பான மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார்.
















