நேபாளத்தில் சேறு நிறைந்த மலைப்பகுதியில் விபத்தில் சிக்கி தவித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை இந்தியாவை சேர்ந்தவர்கள் மீட்ட வீடியோ வைரலாகி உள்ளது.
இந்தியாவை சேர்ந்த அனிமேஷ் குமார் என்ற வ்லாகர் தனது நண்பர்களுடன் நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இருசக்கரத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
சேறு சகதியுமாகக் காணப்பட்ட அந்த மலைப்பகுதியில் அவர்களுக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து கிடந்தார்.
மலைச்சரிவு பகுதியில் விழுந்த அவர் ஒரு கையில் தனது ஸ்கூட்டரை பிடித்துக் கொண்டு உதவிக்கு யாரேனும் வருவார்களா என எதிர்பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அனிமேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணியை பத்திரமாக மீட்டனர்.
இந்தக் காட்சிகள் அனிமேஷ் குமாரின் ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
வீடியோவின் முடிவில் வெளிநாட்டு சுற்றுலா பயணி, தன்னை காப்பாற்றியவர்களிடம் நன்றி நண்பர்களே… நீங்கள் நல்ல மீட்பர் என்று கூறி விடை பெற்றார்.
















