பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்த நடிகர் தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே, அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியானது.
இதனை அறிந்த அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், வீட்டில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த தர்மேந்திரா உடல் நலம் மோசமடைந்ததால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது மறைவிற்கு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
















