திருத்துறைப்பூண்டியில் பெய்த தொடர் கனமழை காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் அதிகபட்சமாக 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருத்துறைப்பூண்டி தாலுகா பாமணி, தெற்கு பாமணி, ஆதிரங்கம், கொக்கலாடி, கட்டிமேடு உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் முற்றிலும் அழுகி விடும் எனவும் கூறியுள்ளனர். மழையால் சேதமடைந்த பயிர்களுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















