அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரதமர் மோடி தலைமையில் இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது.
அயோத்தி ராமர் கோவிலில் மற்றொரு பெரிய விழா இன்று நடைபெறுகிறது. ராமர் கோயிலின் உச்சியில் பிரமாண்ட காவிக்கொடி ஏற்றப்படுகிறது. இந்த சடங்கு காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை ‘சுப் முகூர்த்தம் நேரத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் சுமார் 21 வேத ஆச்சாரியர்களும் தன்னார்வலர்களும் ஓதுவார்களும் பங்கேற்கின்றனர். கொடியேற்றத்தின் போது ஹெலிகாப்டர்கள் மூலம் கோயில் கோபுரத்தின் மீது மலர் பொழிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடியானது சிறப்பு பட்டு நூல் மற்றும் பாராசூட் துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சூரியன், மழை மற்றும் பலத்த காற்றைத் தாங்கும் சக்தி கொண்டது. மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு அதன் தரம் இறுதி செய்யப்பட்டது.
இந்தக் கொடி 22 அடி நீளமும் 11 அடி அகலமும் கொண்டது. இது கோயிலின் 161 அடி கோபுரத்தின் மேல் பொருத்தப்பட்ட 42 அடி கம்பத்தில் வைக்கப்படும். இந்தக் கம்பத்தில் பந்து தாங்கு உருளைகளுடன் 360 டிகிரி சுழலும் அமைப்பு உள்ளது, இது மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் போது சேதமடையாமல் இருக்க உதவும்.
கொடியேற்றத்திற்குப் பிறகு நடைபெறும் பூஜையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று கோயில் அதிகாரிகள் கூறுகின்றனர். பிரதான சன்னதியுடன், மகாதேவ், கணேஷ், ஹனுமான், சூரியதேவ், மா பகவதி, மா அன்னபூர்ணா மற்றும் சேஷாவதாரம் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய கோயில்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி, காசி மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த 108 ஆச்சார்யர்கள் குழு காசி அறிஞர் கணேஷ்வர் சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் சடங்குகளை நடத்துகிறது.
இந்த நிகழ்விற்கு உத்தரபிரதேசம் முழுவதிலுமிருந்து 6,000 முதல் 7,000 விருந்தினர்களை அறக்கட்டளை அழைத்துள்ளது. வாரணாசி டோம் சமூகத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் பிரமாண்டமான கொடியேற்ற விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வேட்பாளராக முன்மொழிந்த மறைந்த டோம் ராஜா ஜெகதீஷ் சவுத்ரியின் உறவினர்கள்.
ராமர் கோயில் மற்றும் அயோத்தி நகரம் முழுவதும் 100 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
















